பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.21) வெளியிட்டுள்ள தகவல்:

''தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவ வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 9 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் மைலாட்டியில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT