நாட்டில் முதன்முறையாக வயது வந்தோருக்கான புத்தகத்தில் க்யூ ஆர் கோடு அச்சடிக்கப்பட்டு, ஸ்மார்ட் போன், கணினி மூலம் கற்பிக்கும் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
மத்திய அரசின் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட் டங்களில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்வியறிவில்லாதவர்களுக்கு சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட படிப்பறி வில்லாத 67,968 பேருக்கு அடிப் படை கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கல்லாதோருக்கான கல்வித் திட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோ ருக்கான பயிற்சி ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சி முகாமை மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் கல்வி கற்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 15,144 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை கல்வி கற்பிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு அவர்களின் பணியிடத்துக்கே சென்று ஓய்வு நேரத்தில் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வயது வந்தோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து பேருந்து வழித்தடம் எண், ஊர் பெயர் மற்றும் கையெழுத்திடக் கற்றவர் களுக்கு அந்தந்த வட்டாரத் தொழில் களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் தமிழகத் தில்தான் முதன் முதலாக வயது வந்தோர் கல்வித் திட்ட புத்தகம் கணினி குறியீட்டுடன் (க்யூ ஆர் கோட்) உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட் போன், இணைய வசதியுடன் கூடிய கணினி மூலம் ஸ்கேன் செய்து, அந்தந்த பாடம் தொடர்பான விரிவான விளக் கத்தை வீடியோவில் பார்த்து கற்கும் வசதியுள்ளது என்று கூறினார்.
வயது வந்தோர் கல்வி இயக்கக துணை இயக்குநர் எஸ்.செல்வராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.