தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்: வீடுதோறும் சின்னம் வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

கி.மகாராஜன்

உள்ளாட்சித் தேர்தலில் வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்களைச் சின்னங்களாகப் பெற்ற வேட்பாளர்கள் அப்பொருட்களை வீடு வீடாக வழங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் 91,975 பதவிகளுக்கு டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3,905 பேர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 33,178 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 53,494 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 20,2567 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு வேட்பாளர்கள் ஊர்களுக்குச் சென்று முதல்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். தற்போது சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அச்சின்னங் களுடன் ஒவ்வொரு வேட்பாளரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப் பகுதிகளில் சுவர்களில் சின்னங்களை வரைந்தும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் வாக்காளர்கள் மத்தியில் தங்களது சின்னங்களை மனதில் பதிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல வேட்பாளர்கள் பொம்மைச் சின்னங்களை வீடு வீடாக விநியோகித்து வரு கின்றனர்.

சீப்பு, பந்து, இறகுப் பந்து, சோப் டப்பா, ஸ்பூன், வளையல், விசில், ஸ்பேனர், கத்திரிக்கோல், கப், கத்தி, டென்னிஸ் பேட் உள்ளிட்ட பொருட்களை சின்னங்களாகப் பெற்றுள்ள வேட்பாளர்கள் அந்தப் பொருட்களை விலைக்கு வாங்கி வீடு வீடாகச் சென்று வாக்காளர் களுக்கு வழங்கி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் தங்களது வீட்டுப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். பெண் வேட்பாளர்கள் பலர் தங்கள் கணவர்களுடன் சென்று பிரச் சாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரிக்கின்றனர்.

பிரச்சாரத்துக்குச் செல்லாத பெண் வேட்பாளர்களில் பலர் சுவரொட்டிகளில் மட்டும் கணவர்களுடன் கும்பிட்டபடி காட்சியளிக்கின்றனர். முக்கியப் பிரமுகர்கள் சந்திப்புக்கு நேரில் செல்வதுடன் பெண் வேட்பாளர்கள் பலர் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT