தமிழகம்

பொறியியல் முதலாம் ஆண்டு இன்று வகுப்புகள் ஆரம்பம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

செய்திப்பிரிவு

பொறியியல் முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது.

95 ஆயிரம் காலி இடங்கள்

அதன்பிறகு, தொழிற்கல்வி மாணவர்களுக்கும் கடைசியாக, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி அன்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. பிஇ, பிடெக், படிப்புகளில் மொத்தமுள்ள 2 லட்சத்து 2 ஆயிரத்து 422 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 969 இடங்களே நிரம்பின. 94 ஆயிரத்து 453 இடங்கள் காலியாக கிடக்கின்றன.

இந்த நிலையில், பொறியியல் முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், “அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அதற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதல் ஆண்டு பிஇ, பிடெக் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 3-ம் தேதி (இன்று) தொடங்குகின்றன. எம்இ, எம்டெக் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 17-ம் தேதி ஆரம்பமாகும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT