புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி. இவரது சகோதரர் கார்த்திகேயன். இவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது அங்கிருந்து வெளியேறி டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து, தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் அங்கிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 14-வது ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் எம்.நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 19-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பின்போது தனது மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அதிமுக வேட்பாளர் நாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினருக்கும், நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்ட திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு மேஜை, நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அலுவலக அறைகள் மூடப்பட்டன. போலீஸார் குவிக்கப்பட்டனர். மோதலினால் காயம் அடைந்த இருதரப்பிலும் 8 பேர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனினும், நாராயணனின் வேட்புமனு திரும்பப் பெறப்படவில்லை.
தேர்தலை சந்திக்க அதிமுக வேட்பாளர் விருப்பம் இல்லாதிருந்ததால் கடந்த 2 தினங்களாக அவர் தேர்தல் பணியாற்றவில்லை. இதனால் கார்த்திகேயன் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருமயம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி முன்னிலையில் அக்கட்சியில் நாராயணன் இன்று இணைந்தார். அப்போது, கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.