தமிழகம்

முரசொலி நில விவகாரத்தில் 83 ஆண்டுகளுக்கான ஆவணங்களை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது திமுக

செய்திப்பிரிவு

முரசொலி நிலம் தொடர்பான 83 ஆண்டுகளுக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் திமுக சமர்ப்பித்துள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்த இடம் பஞ்சமிநிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட பெரும் பிரச்சினை யாக உருவெடுத்தது. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தானா என்பது விசாரிக்கக் கோரி தேசிய எஸ்.சி. ஆணையத்திடம் பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி தேசிய எஸ்.சி. ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று குற்றம்சாட்டிய ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மீது சென்னை 14-வது பெருநகர நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி, சத்திய பிரமாண வாக்குமூலம் அளித்தார். அத்துடன் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பதற்கான 83 ஆண்டுகளுக்கான மூல ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி 24-ம்தேதிக்கு சென்னை 14-வது பெருநகர நீதித் துறை நடுவர் தள்ளிவைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதற்கான அனைத்து ஆவணங் களையும் நீதிமன்றத்தில் சமர்ப் பித்துள்ளோம். இனியாவது உண்மையை உணர்ந்து ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரினால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்று அவதூறு வழக்குகளை திரும்பப் பெற தயாராக இருக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT