ஐந்தாவது முறை முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக நேற்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.50 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை, சட்டப்பேரவை வாயிலில் பேரவைத் தலைவர் பி.தனபால் மற்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். 9.52 மணிக்கு பேரவை அரங்க பகுதிக்கு முதல்வர் வந்தபோது, பேரவைக்குள் இருந்த அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். ஆனால், முதல்வர் அவைக்குள் வராமல் தனது அறைக்கு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து 9.57 மணிக்கு பேரவைக்குள் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அப்போது, அவையில் இருந்த அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டி அவரை வரவேற்றனர். முதல்வர் உள்ளே வந்ததும் அவருக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் வணக்கம் தெரிவித்தனர்.
சரியாக 10 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின. 5-வது முறையாக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பேரவைக்கு வந்த முதல்வரை வரவேற்று பேரவைத் தலைவர் பேசினார். பேரவை தலைவரின் வரவேற்புரை முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
அப்போது ஆளுங்கட்சியினர் கைகளையும் மேஜையையும் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். முதல்வருக்கு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குணசேகரன், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரங்கராஜன் ஆகியோர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசித்தார். 10.17 மணிக்கு பேரவை நிகழ்ச்சிகள் முடிந்தன. அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதா தனது இல் லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.