தமிழகம்

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க தமிழக பல்கலைக்கழகங்களில் ‘இ-சனத்’ திட்டம் அறிமுகம்: அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க தமிழக பல்கலைக்கழகங்களில் ‘இ-சனத்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 1.75 கோடி பேர் பல்வேறு அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளதாகவும், இதில் உலகளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளதாகவும் சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு (ஐஒஎம்) அறிக்கை கூறுகிறது.

வேலை நிமித்தமாகவும், மேற்படிப்பு படிக்கவும் தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் பேர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுகிறார்கள். அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டும். அதற்காக ‘இ-சனத்’ என்னும் ஆன்லைன் திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை எளிமையாக்கியுள்ளது.

முன்னதாக, சான்றிதழ் சரிபார்ப்புக்காக கல்வி நிறுவனங்கள் வழியாக வெளியுறவுத் துறைக்கு தங்களின் சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி, மாணவர்கள் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு அதிக பணச்செலவும், நேர விரயமும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ‘இ-சனத்’ மூலம் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டத்தை தேசியத் தகவல் மையம்(என்ஐசி) உருவாக்கியது.

‘இ-சனத்’ திட்டத்தை அமல்படுத்த தேவையான இணையதள போர்ட்டலை உருவாக்கவேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களும் என்ஐசி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களும், தொழில்நுட்ப கல்வி இயக்ககமும் (டோட்) ‘இ-சனத்’ போர்ட்டெல்லை உருவாக்கியுள்ளன. சான்றிதழ்களை சரிபார்க்க விரும்பும் நபர்கள் www.esanad.nic.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் லாகின் ஐடி மூலம், தங்களின் முழு விவரங்களை பதிவுசெய்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர், தாங்கள் படித்த பல்கலைக்கழத்தின் இணையதளத்தில் உள்ள ‘இ-சனத்’ போர்டலில், சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணத்தை கட்டவேண்டும்.

இதையடுத்து, வெளியுறவுத் துறையில் இருந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தை இணையம் மூலம் தொடர்பு கொண்டு, விண்ணப்பதாரரின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராயும். உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகு, வெளியுறவுத் துறையில் இருந்து அஞ்சல் மூலம், உண்மைத் தன்மை சான்றிதழ் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்படும்.

இந்த நடைமுறையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு அதிகபட்சமாக 15 நாட்கள்களே ஆகும். ஒருவேளை சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமானால், விண்ணப்பம் எங்கு தேங்கி இருக்கிறது என்பதை ஆன்லைனில் அறிந்து புகார் அளிக்கலாம். ஒருமுறை உண்மைத் தன்மை சான்றிதழ் அங்கீகாரம் பெற்றாலே போதுமானது.

இதுகுறித்து என்ஐசியின் தொழில்நுட்ப இயக்குநரும், ‘இ-சனத்’ திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான வி.சுரேஷ் கூறியதாவது: ‘இ-சனத்’ முறை மூலம் மிகக் குறைந்த நாட்களில் சான்றிதழ்களை சாரிபார்க்க முடியும். அதேபோல், இடைத்தரகர்களுக்கும் இனி வேலையிருக்காது. உண்மைத்தன்மை சான்றிதழ்களை பெற விரும்பும் நபர்கள், இனி ‘இ-சனத்’திலேயே விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

‘இ-சனத்’ முறையை சென்னை மாநகராட்சியும் தற்போது அமல்படுத்தியுள்ளது. இதன்படி பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் உண்மைத் தன்மையை நிரூபிக்க ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. ஆனால், தன்னாட்சி கல்லூரிகளும், சில நிகர்நிலை பல்கலைக்கழகமும் இன்னும் இணையவில்லை.

சிபிஎஸ்சியில் ‘இ-சனத்’ முறை உள்ளது. ஆனால், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சமீபத்தில் படித்த மாணவர்களின் விவரங்கள் மட்டுமே டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளதால் ‘இ-சனத்’ இன்னும் செயல்படுத்த முடியவில்லை.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கல்லூரிகளில் ‘இ-சனத்’தை அறிமுகம் செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT