பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் காளைகள் கணக்கெடுக்கும் பணி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழரின் வீரம், பண்பாடு, கலாச்சார அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருக்கிறது. இதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இப்போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை குவிவார்கள்.
தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அந்தந்தஊர், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பெரும்பாலும் புலிகுளம், காங்கயம், உப்பலாச்சேரி காளையினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர சொற்பஅளவில் தேனி மலை மாடு, வத்ராயிருப்பு மாடு மற்றும் வரையறுக்கப்படாத காளையினங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயார்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகளைக் கணக்கெடுக்கும் பணி கால்நடைப் பராமரிப்புத் துறைசார்பில் ஆன்லைன் மூலம் தொடங்கி நடக்கிறது. இக்கணக்கெடுப்பில் மதுரை, திருச்சி மாவட்டங்களில் காளை வளர்ப்போர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
மதுரை கால்நடைத் துறை மாவட்ட இணை இயக்குநர் டி.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியதாவது: தமிழகத்தில் எத்தனை ஜல்லிக்கட்டுக் காளைகள் உள்ளன, அதன் இனங்கள் உள்ளிட்ட தனியான எண்ணிக்கை விவரம் இல்லை. அதனால், ஆன்லைன் மூலம் கணக்கெடுக்கும் பணி கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக கால்நடை மருத்துவமனைகளில் புதிய டேட்டாதகவல் மையம் உருவாக்கப்பட் டுள்ளது.
காளைகளைப் பதிவு செய்வதற்காக கால்நடை பராமரிப்புத் துறை தனி இணைய மென்பொருள் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு காளையின் இனம், வயது, உயரம், நிறம், கொம்பின் இடைவெளி, வலது கண்ணின் கருவிழித்திரை புகைப்படம்உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் பெயர், முகவரி, ஆதார் கார்டு மற்றும் தகவல் தொடர்புகொள்ள அலைபேசி எண் ஆகியவற்றை இணைத்துப் பதிவு செய்யப்படுகிறது. மதுரை, திருச்சியில் காளை வளர்ப்போர் ஆர்வமுடன் பதிவு செய்கின்றனர்.
காளை விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் முடிந்ததும், அந்தத் தரவுகளை ஆய்வு செய்வோம். காளைகள் எண்ணிக்கைதெரியவந்த பிறகு இணையதளத்தில் காளைகள் விவரம் வெளியிடப்படும். அதன்பிறகு ஒவ்வொரு ஊரில்எத்தனை காளைகள் இருக்கின்றன, அவை எந்த இனத்தைச் சார்ந்தவை என்ற விவரம் தெரியவரும்.
கைரேகையை விட கருவிழிப் புகைப்படம் தனித்துவம் வாய்ந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வரும்போது அந்தக் காளையைஅடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள காளைகளுக்கு குறைந்தபட்சம் 3 வயதும்,உயரம் 120 சென்டி மீட்டர் இருந்தால் மட்டுமே தகுதி உடையது. தற்போது ஆன்லைன் பதிவு விவரங்களை வைத்து எளிதாக ஜல்லிக்கட்டு காளைகளின் தரத்தை மதிப்பீடு செய்துவிடலாம் என்றார்.