திண்டுக்கல் ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் விதமாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காமல் 1243 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் இருந்துள்ளது திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தேர்தல் ஓட்டுப்பதிவின்போது இந்த நிலை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என மாவட்ட நிர்வாகம் அதிர்ந்துபோய் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நாள் அன்று, நிலை ஒன்று முதல் நிலை 5 வரை பணிபுரிய ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 16802 நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வாக்குப்பதிவின்போது செயல்படுவது குறித்து விளக்க முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற்றது.
இதற்காக ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம், நேரத்தை குறிப்பிட்டு தவறாமல் பங்கேற்கவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவுலர் என்ற முறையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவாக தபால் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவை அலட்சியப்படுத்தும்விதமாக முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்களில் 1243 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கவில்லை என தற்போது தகவல் தெரியவந்துள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புக்களில் அவசியம் பங்கேற்கவேண்டும், என உத்தரவிட்டும் பங்கேற்காதவர்கள், தேர்தல் நாளான்று இவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் இத்தனை பேர் பணிகளை எப்படி சமாளிப்பது என தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பட்டியல் தயார்செய்து (மொத்தம் 1243 பேர்) பங்கேற்காதவர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் திண்டுக்கல் ஆட்சியருமான மு.விஜயலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதில் தெரிவித்துள்ளதாவது:
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வருகைதராத 1243 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் ஏன் தங்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது என்பதற்கான விளக்கத்தினை நோட்டீஸ் கிடைத்தவுடன் தெரிவிக்கவேண்டும்.
தவறும் பட்சத்தில் தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயிற்சியில் வகுப்பில் பங்கேதாவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.