தமிழகம்

பிடதி ஆசிரமத்தில் உள்ள மகனை மீட்கக் கோரி தாயார் வழக்கு: நித்யானந்தாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த தனது மகனை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் பதிலளிக்க நித்யானந்தாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நித்யானந்தாவும் பிரச்சினைகளும் சேர்ந்தே எப்போதும் பயணிக்கும். இதில் நித்யானந்தா ஆசிரமம் அமைந்துள்ள பிடதியிலும் இன்னும் சில இடங்களிலும் தங்கள் பிள்ளைகள் அடைத்து வைக்கப்படுவதாக காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் பல புகார்கள் உள்ளன.

சமீபத்தில் கூட அஹமதாபாத் ஆசிரமத்தில் குழந்தைகளை அடைத்து வைத்ததாக அம்மாநில போலீஸ் வழக்குப் பதிவு செய்து ஆசிரமத்திற்கு சீல் வைத்தது. இந்நிலையில் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் 15 ஆண்டுகளாக இருந்த தனது மகனைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் அங்கம்மாள் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

பிடதி என்ற இடத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003-ம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது.

அவரது மனுவில், “கடந்த 15 வருடங்களாக நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த மகனைப் பார்த்து வந்த நிலையில், 5 மாதங்கள் முன்பு வரை பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. அவர் என்ன ஆனார், ஏன் பேச அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை. நித்யானந்தாவின் சட்டவிரோதக் காவலிலிருந்து எனது மகனை மீட்டு ஒப்படைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

தாயார் அங்கம்மாள் தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல் துறையினர் மற்றும் நித்யானந்தாவிற்கு உத்தரவிட்டு, நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT