குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (டிச.20) வெளியிட்ட அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிகளைத் தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படைப் பண்பான மதச்சார்பற்ற நெறிகளையும் பாதுகாக்க மக்கள் எழுச்சி கொண்டு போராடி வருவதை ஒடுக்கி விட வேண்டும் என்ற வெறியோடு மத்திய உள்துறை அமைச்சகம், காவல் துறை நிர்வாகத்தைப் பயன்படுத்தி அதிகார அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பொறுப்பில் உள்ள காவல்துறை நடத்திய வன்முறையில் மாணவர்கள் சிந்திய ரத்த வாடை வீசுகிறது.
காவல்துறையினரே அரசு வாகனங்களுக்குத் தீ வைப்பது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை காட்சி ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்கள், மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள், குடிமை சமூக அமைப்புகள், ஜனநாயகப் பாதுகாப்பு செயல்பாட்டாளர் நடத்தி வரும் அறவழிப் போராட்டங்களை வன்முறையாகச் சித்தரித்து, கருத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டமைக்கப்பட்ட கற்பனை கருத்துகளை ஆதாரப்படுத்தி போராடி வரும் மக்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை மத்திய அரசு, பாஜக ஆளும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
பெங்களூரு நகரில் காந்தி உருவப் படம் தாங்கி போராடிய வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா பலவந்தமாக கைது செய்யப்பட்டார்.
மங்களூருவில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைப் படுகொலை செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மனித உயிர்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு தனது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாறாக தனிநபர் மையப்பட்ட சர்வாதிகார ஆட்சி முறை கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சட்ட ரீதியாகச் சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அதிமுக உறுதியுடன் மாநிலங்களவையில் எதிர்த்து இருந்தால், இந்த மாபெரும் பாதகத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால், கொள்கை உறுதியற்ற அதிமுக மக்கள் நலன்களுக்கு எதிரான திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து விட்டது.
நாட்டில் நடைபெறும் துயரங்களுக்கு பாஜக, அதிமுக பொறுப்பேற்க வேண்டும். மக்கள் உணர்வுகளை மதிக்காத, அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தி வரும் பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்து, திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வருகிற வரும் 23-ம் தேதி, திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையில் கண்டனப் பேரணி நடத்துகிறது.
நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், ஜனநாயக உணர்வு கொண்டோர், மதச்சார்பற்ற கொள்கையாளர்கள், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என அனைத்துப் பகுதியினரும் கண்டனப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.