தமிழகம்

வாங்காத கடனை தள்ளுபடி செய்ததாக 2006-ல் அரசு கடிதம்; 13 ஆண்டுக்கு பின் தள்ளுபடியான கடனை செலுத்த நிர்பந்தம்- 29 ஆண்டுகளாக தீர்வுகாண முடியாமல் திணறும் மதுரை விவசாயி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அருகே விவசாயி ஒருவரின் வாங்காத கடனை தள்ளுபடி செய்ததாக அரசு கடிதம் அனுப்பிய நிலையில் தற்போது அந்தக் கடனை வட்டியுடன் செலுத்துமாறு கூட்டுறவுச் சங்கம் கூறியுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாண்டியன். கடந்த 2006 மார்ச் 31ம் தேதி பாண்டியனுக்கு, அரசு தரப்பிலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில் சேங்கிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 1991ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அன்று சாண எரிவாயு அடுப்பு அமைப்பதற்கு பாண்டியன் 6 ஆயிரத்து 300 ரூபாய் கடன் பெற்றதாகவும், 2006ம் ஆண்டில் 3 ஆயிரத்து 626 ரூபாய் வட்டி சேர்த்து 28 ஆயிரத்து 731 ரூபாயாக கடன் தொகை இருந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்த படி அந்த கடன் தொகை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாங்காத கடனை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று அதிர்ச்சி அடைந்த பாண்டியன், அன்றைய தொடக்க வேளாண் கூட்டுறவு அதிகாரிகளை நேரில் சந்தித்து, தான் எந்த கடன் தொகையும் பெறவில்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

அதற்கு அதிகாரிகள், கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதாகதானே வந்துள்ளது, எனவே அதைப்பற்றி கவலை வேண்டாம் என பாண்டியனை சமாதானம் செய்து திருப்பி அனுப்பியுள்ளனர். அவரும் பிரச்சினை இல்லை என வீட்டிற்க திரும்பினார்.

இந்நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனது விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க சேங்கிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு கடன் பெற பாண்டியன் சென்றுள்ளார்.

அப்போது தான், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் 1991ல் வாங்கியதாக கூறப்படும் 6300 ரூபாய் கடனுக்கு கடந்த 29 ஆண்டுகளாக வட்டி போடப்பட்டு 58 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவை இருப்பதாகவும், அதனால் புதிய கடன் தர முடியாது என்றும், இந்த கடனை அடைத்தால் மட்டுமே தர முடியும் என தற்போதைய கூட்டுறவு வங்கி தலைவர் சாகுல் ஹமீது கூறியுள்ளார்.

அதிர்ச்சி மேல் அதிர்சியடைந்த பாண்டியன், ‘‘நான் கடனே வாங்கவில்லை. வாங்காத கடனை தள்ளுபடி செய்தீர்கள். இப்போது தள்ளுபடி செய்ததாக நீங்களை கடிதம் அனுப்பிய பிறகு மீண்டும் அந்த கடனுக்கு வட்டி மேல் வட்டிப் போட்டு கடனை கேட்கிறீர்களே, ’’ என்று தெரிவித்துள்ளார்.

நொந்துபோன விவசாயி பாண்டியன், இந்த வாங்காத கடன் விவகாரப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் கடந்த ஒரு மாதமாக தினமும் வீட்டிற்கும், சேங்கிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

கூட்டுறவு வங்கி தலைவர் சாகுல் ஹமீதிடம் கேட்டபோது, ‘‘பாண்டியன் கணக்கில் வங்கி கணக்குப்பதிவேட்டில் கடன் பாக்கி இருந்தது. அதன்அடிப்படையிலே அவர் புதிய கடன் பெற வந்தபோது கடன் பாக்கியிருப்பதாக கூறினோம். ஆனால், அவர் கடன் பெறவில்லை என்றும், ஏற்கணவே பெறாத அந்த கடனை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.

ஆனால், எப்படி வங்கிக் கணக்கு ஆவணத்தில் அவர் பெயரில் கடன் பாக்கி இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவரிடம் தள்ளுபடி செய்திற்காக அரசிடம் இருந்து வந்த ஆவணங்களை கேட்டுள்ளேன். அதை அவர் கொடுத்ததும், மாவட்ட பதிவாளரிடம் புகார் தெரிவித்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றார்.

SCROLL FOR NEXT