‘‘வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படக்கூடாது’’ என்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் வழிகாட்டி விதிமுறைகளில் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாவது:
சரியான காரணமின்றி வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவு அலவலர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை மீறி குறிப்பிட்ட ஒரு வேட்பாளரின் தேர்வு வாய்ப்பினை குறைக்கவோ அல்லது அதிகரிக்கும் வகையிலே வாக்காளர்களை வாக்களிக்க தூண்டுவதோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது.
அதுபோல், அவர்களை காரணம் எதுவுமின்றி வாக்காளர்களை வாக்குப்பதிவிலிருந்து தவிர்ப்பதும் குற்றமாகும். மீறி செயல்பட்டால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடியில் இன்முகத்துடன் அனைத்து வேட்பாளர்களையும் சமமாக நடத்த வேண்டும்.
தகராறு நடந்தால் அதில் நியாயமான முறையில் பேசி முடிவெடுக்க வேண்டும். வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்கள் நடத்தை மற்றும் செயல்பாடுகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு நியாயமாகவும் நடுநிலையுடனும் நடந்து கொள்கிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில் வாக்குச்சாவடிகளில் தொல்லைகள் ஏற்படுத்துதல், சட்ட விரோத செயல்களில் ஈடுபட முயன்றால் அவர்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் உறுதியுடன் சமாளிக்க வேண்டும். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவது, வாக்குச்சாவடி அலுவலர்கள் மன திடம், கவனம், அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நடுநிலைமை ஆகியவற்றை பொறுத்துள்ளது.
வாக்குச்சாவடிக்கு வெளியே 100 மீட்டர் தூர எல்லையில் சுண்ணாம்பு அடையாளக்கோடு போடப்பட்டிருக்கும். இந்த எல்லைக்குள் தேர்தல் பிரச்சாரம் செய்வது குற்றமாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் ஜாமீன் வழங்க முடியாத வகையில் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யலாம்.
இந்த எல்லைக்குள் வரும் நபர்கள், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் பெயர் அல்லது சின்னம் கொண்டுள்ள பேட்ஜ்களை சட்டையில் அணியக்கூடாது. வாக்குச்சாவடிகள் அருகே வாக்குப்பதிவுக்கு தொந்தரவாக ஒலிபெருக்கி, மெகா போன் பயன்பாடு இருந்தால் அதை நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தூர வரையறை எதுவும் கிடையாது.