தமிழகம்

ஸ்டாலினுடன் கரம் கோக்கிறார் கமல்; டிச.23 திமுக பேரணியில் பங்கேற்க திமுக நேரில் அழைப்பு

செய்திப்பிரிவு

ஸ்டாலினுடன் கரம் கோக்கிறார் கமல், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க கமல்ஹாசனை நேரில் சென்று திமுக அழைத்தது. இதையடுத்து திமுக போராட்டத்தில் மக்கள் நீதிமய்யம் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக என்கிற 2 பிரதான கட்சிகள் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் , மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளாக மாறி மாறிக் களம் காண்கின்றன.

இதில் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் ரஜினி கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக குதிக்கப்போவதாக அறிவித்தார். மக்கள் நீதிமய்யம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்த கமல் அதற்கு முன் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார். ஆனால், கமல் கட்சியை திமுக கண்டுகொள்ளவில்லை.


இதனிடையே கமல் கட்சி ஆரம்பித்த பின், அவர் ஆளுங்கட்சியை விமர்சித்ததால் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கமலைக் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே நீட் உள்ளிட்ட விவகாரங்களில் கமல் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால், திமுகவினர் அதில் பங்கேற்கவில்லை.

அடுத்து சில நாட்களிலேயே நடந்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தை திமுக அழைக்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதில் மக்கள் நீதிமய்யம் பல இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றது.

அதற்குப் பின்னரும் திமுக, மக்கள் நீதி மய்யத்தின் மீது பாராமுகமாகவே இருந்தது. இந்நிலையில் கமல், ரஜினி இருவரும் தாங்கள் தேவைப்பட்டால் அரசியலில் கை கோப்போம் என தெரிவித்தனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் கிளர்ச்சி வெடித்து வரும் நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.

கமலும் கடுமையாக இச்சட்டத்தைக் கண்டித்து வருகிறார். திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என கமலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''அழைத்தால் செல்வோம், அழையா விருந்தாளியாக எந்நாளும் செல்லமாட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும், கமலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைக்கவில்லை. இந்நிலையில் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் டிச.23 அன்று பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பேரணியில் கலந்துகொள்ள கமலுக்கும் அழைப்பு விடுப்பது என திமுக முடிவெடுத்தது.

மக்கள் நீதி மய்யத்தைப் பேரணியில் கலந்துகொள்ள அழைப்பதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் இருவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். கமல் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து திமுக நடத்தும் பேரணியில் கலந்துகொள்வதாக கமல் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் விடுத்துள்ள அறிவிப்பு:

“வருகின்ற டிசம்பர் 23-ம் தேதியன்று திமுக அதன் தோழமைக் கட்சிகளோடு இணைந்து நடத்தவிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கலந்துகொள்ள வேண்டி திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியும், பூச்சி முருகனும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்”.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT