தமிழகம்

திண்டுக்கல்லில் ஒன்றிய கவுன்சில் வார்டுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ம.நீ.ம., மாவட்டச் செயலாளர் நீக்கம்

பி.டி.ரவிச்சந்திரன்

கட்சித் தலைமையின் உத்தரவை மீறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ராஜசேகர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சியின் நிர்வாகிகள் யாரும் போட்டியிடவில்லை. மற்றவர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மத்திய செயலாளர் ஆர்.எம்.ராஜசேகர், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் வார்டுக்கு சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

இதுகுறித்து கட்சித்தலைமைக்கு தகவல் தெரிந்ததையடுத்து கட்சித்தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து ஆர்.எம்.ராஜசேகர் கூறியதாவது: சீலப்பாடி ஊராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் என்னை போட்டியிடச் சொல்லி வலியுறுத்தினர்.

இதுகுறித்து கட்சித்தலைமைக்கு தெரிவித்து சுயேச்சையாக போட்டியிட அனுமதிகேட்டேன். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வேட்புமனு தாக்கல் செய்தேன். கட்சித்தலைமை நடவடிக்கை குறித்து எதுவும் கூற விரும்பவில்லை, என்றார்.

SCROLL FOR NEXT