ஒடிசாவில் நக்சலைட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நக்சலைட் இயக்கத்தின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிர் நடவடிக்கையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர் எம்.ரவிச்சந்திரன் மற்றும் குமரி மாவட்டம் அருமனை கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு வீரர் ஜி.எஸ்.அபிலாஷ் ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டம் சிந்தாதுளி கிராமத்தில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலால் கடந்த 26-ல் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்