ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே நாளை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் உயர் நீதிமன்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் தனி வாக்குப்பெட்டி பயன்படுத்தக்கோரியும், பொங்கல் பரிசு திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு செயல்படுத்த வலியுறுத்தியும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லமனார்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் பி.சுப்புலெட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகத்தில் டிச. 27 மற்றும் 30-ல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. வாக்களித்த பிறகு அனைத்து வாக்குச்சீட்டுகளையும் ஒரே பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு சீட்டுகளை பிரித்தெடுப்பதில் காலவிரயம் ஏற்படும். வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்கள் நிகழும். எனவே ஒவ்வொரு பதவிக்கான வாக்குச்சீட்டுகளை போடுவதற்கும் தனித்தனி வாக்குப்பெட்டி பயன்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் சர்க்கரை, கரும்பு, பச்சை அரிசி வழங்கும் திட்டம் டிச .20-ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது இத்திட்டத்தை செயல்படுத்துவது ஆளும்கட்சி சார்பில் சட்டப்பூர்வமாக லஞ்சம் வழங்குவது போலாகும்.
மேலும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே பொங்கல் இலவச பொருட்களுக்கான டோக்கன் தருவதாக ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக நிர்வாகிகள் வாக்காளர்களிடம் சொல்லியுள்ளனர்.
இதனால் ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் வாக்காளர்கள் இலவச பொருட்களுக்காக வாக்காளர்கள் அதிமுகவினருக்கு வாக்களிக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது இலவச திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் நடத்தையை மீறும் செயலாகும்.
எனவே பொங்கல் பரிசு திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு செயல்படுத்தவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வாக்குப்பெட்டி பயன்படுத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு 16.12.2019-ல் மனு அனுப்பினேன். என் மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் துரைச்சாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே நாளை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
மேலும், மனுதாரரின் ஒவ்வொரு பதவிக்கும் தனி வாக்குப்பெட்டி கோரிக்கையை அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அவர் முன்வைக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.