அரக்கர்கள் உருவாவதைத் தடுங்கள் எனவும் அதற்கு சரியான வளர்ப்பு தேவை என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த மாணவி நிர்பயா கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை உறுதியாகியுள்ளது.
இச்சூழலில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாதங்கள், வழக்கு குற்றவாளிகளில் ஒருவரின் மனு தள்ளுபடி தொடர்பான செய்திகளை வாட்ஸ் அப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பகிர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்து:
"அரக்கர்கள் உருவாவதை நாம் தடுக்க வேண்டும். வீட்டில், பள்ளிகளில், கல்லூரிகளில் மற்றும் சமூகத்தில் சரியான வளர்ப்பு அவசியம். நமக்குப் பொறுப்புண்டு. சரியான வளர்ப்பு மூலம் சமுகத்தில் அரக்கர்கள் உருவாவதைத் தடுப்பது அவசியம். இக்கருத்தையே அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.