தமிழகம்

ஸ்மார்ட் மயானமாக மாறும் தத்தனேரி இடுகாடு: சடலங்களை எரிக்க எல்பிஜி., கேஸ் எரியூட்டும் வளாகம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை தத்தனேரி மயானம் ஸ்மார்ட் மயானமாக மாற்றப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இதில், தத்தேனேரி, மூலக்கரை மயானங்கள் முக்கியமானவை.

தத்தனேரி மயானம், தமிழகத்தின் மிகப்பெரிய மயானங்களில் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் இந்த மயானத்தில் சடலங்கள் வருவதும், எரியூட்டுவதும், சடங்கு சம்பிராதயங்கள் நடப்பதுமாக 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 30 முதல் அதிகப்பட்சமாக 50 சடலங்கள் வரை எரியூட்டப்படுகிறது. சடலங்கள் இந்த மயானத்தில் திறந்த வெளியிலும், பயோ கேஸ் எரி வாயு தகன மேடையிலும் எரியூட்டப்படுகிறது. இந்த பணிகளை செய்வதற்கு, மாநகராட்சி மூன்று ‘ஷிப்ட்’ அடிப்படையில் ஊழியர்களை நியமித்து இந்த தத்தனேரி மையானத்தை நிர்வகிக்க மாநகராட்சியில் தனிப்பிரிவே செயல்படுகிறது. தற்போது பயோ கேஸ் எரிவாயு தகனமேடையில் வெளியேறும் புகை மேல்பகுதியில் உள்ள உயரமான குழாய் வழியாக வெளியேறாமல் அடிப்பகுதி வழியாக குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்கிறது.

மயானத்தில் குப்பையும், கழிவு நீரும் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சடலங்களைத் திறந்த வெளியில் எரிப்பதால் தூர்நாற்றமும், சுகாதாரசீர்கேடும் ஏற்படுகிறது. செடி, கொடிகள் அடர்ந்து மயான வளாகம் புதர்காடாகி கிடக்கிறது. மின் மயானத்தின் புகைபோக்கியால் அதன் சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சடலத்தை எரிக்க வருவோர், குளிப்பதற்கும், கை கால்கள் கழுவதற்கு போதுமான தண்ணீர் வசதியில்லை. மழைகாலத்தில் மழை நீர் தேங்கி மயானத்திற்கு வருவோருக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடல்களை எரியூட்ட வருவோர் கொசுக்கடியால் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தத்தனேரி மயானத்தை ஸ்மார்ட் மயானமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதில், எல்.பி.ஜி., கேஸ் வசதி கொண்ட எரியூட்டும் வளாகம் அமைக்கப்படுகிறது. தற்போது உடல்களை எரிக்க எரிவாயு தகன மேடையை தினமும் காலையிலேயே இயக்க வேண்டும். அப்போது தான், வெப்பமடைந்து உடல்களை எரியூட்ட முடியும். அதனால், மாசு ஏற்படுகிறது. தற்போது இந்த நிலையை மாற்ற ஸ்மார்ட் மயானத்தில் உடல்களை எரியூட்ட எல்.பி.ஜி., கேஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த முறையில் தேவைப்படும் போது உடல்களை நினைத்த நேரத்தில் எரியூட்டிக் கொள்ளலாம். குறைந்த அளவே சாம்பல் கிடைக்கும். இதனால் மாசு குறையும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மயானத்தில் சில அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன. தற்போது இந்த மயானம், தமிழகத்தின் மற்ற மயானகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் ‘ஸ்மார்ட் மயானமாக’ மாற்றவதற்கு முடிவு செய்துள்ளோம்.

மயானத்தில் சடலங்களை எரியூட்டுவது, முதல் அதற்கான முன்பதிவு, கண்காணிப்பு மேமரா, ஸ்மார்ட் சாலைகள், 24 மணி நேரம் குடிநீர், மின் விளக்குகள் வசதிகளை ஏற்படுத்தி, மயானம் வளாகத்தில் நிழல் தரும் மரங்கள், பூஞ்செடிகளை வைத்து பராமரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக மாற்ற உள்ளோம். அனைத்து பணிகளும் மயானத்தில் கணிணி மயமாகக்கப்படுகிறது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT