பல்வேறு திட்டங்களின் கீழ் தமிழகத் துக்கு தரவேண்டிய ரூ.10,100 கோடி நிதியை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாநில நிதி அமைச் சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தின் சார் பில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்துக்கு கடந்த 2017-18ம் ஆண்டிலிருந்து ஐஜிஎஸ்டி நிலுவை ரூ.4 ஆயிரத்து 73 கோடியாக உள் ளது. இதை விரைவாக வழங்க வேண் டும். கடந்த, 2017-18-ம் ஆண்டுக் கான ஐஜிஎஸ்டியில் மத்திய அரசின் தவறான கணக்கீட்டால் வசூலிக்கப்பட்ட ரூ.88,344 கோடியே 22 லட்சம் நிதி ஒருங்கிணைந்த நிதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு வரவேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவை ரூ.48,650 கோடி கிடைக்கவில்லை. எனவே, மத்திய அரசு தனது அரசியலமைப்பு பொறுப்பை உணர்ந்து, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை 5 ஆண்டுகளுக்கும் உரிய கால இடைவெளியில் வழங்க வேண்டும்.
நதிநீர் இணைப்பு
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பி யாறு இணைப்பு, கல்லணை கால் வாய் நவீனப்படுத்துதல் உள் ளிட்ட திட்டங்களுக்கு அனுமதியளிப் பதுடன் வரும் 2020-21 மத்திய நிதிநிலை அறிக்கையில் இவற்றுக்கு உரிய நிதியையும் ஒதுக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் 118.9 கிமீ தூரத்துக்கான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.69,180 கோடி மதிப்பிடப்பட்டு, அதில் 52.01 கி.மீ தூரத்துக்கு மாநில திட்டத்தின் கீழ் ஜப்பான் கூட்டுறவு முகமையிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. மீதமுள்ள தூரத்துக்கான திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதியின்கீழ் செயல்படுத்த மத்திய அரசு விரைவில் அனுமதியளிக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி திட்டம், இடைநிலை கல்வி திட்டம், கல்வி உரிமை சட்டம், வெள்ள மேலாண்மை திட்டம், உயர்கல்விக்கான நிதி ஆகியவற்றில் நிலுவையில் உள்ள ரூ.10,100 கோடியே 98 லட்சம் நிதியை விரைவாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நகர்ப்புற வீடுகளுக்கான மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு 60-க்கு 40 என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற திட்டத்தில் ஒரு வீட்டுக்கு அளிக்கப்படும் ரூ.1.20 லட்சத்தை 4 லட்சமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.