சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போலியான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதுபோன்ற போலியான தொலைபேசி அழைப்புகளால் போலீஸார் படாதபாடு படுகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் சென்னையில் அதிகரித்துள்ளன. கடந்த 2-ம் தேதி ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஆவடி ரயில் நிலையம், தி.நகர் ஜெயின் பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன. 6-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனை என மூன்று இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
ஏற்கெனவே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இந்த மிரட்டல் போன்களை அலட்சியப்படுத்த முடியாத காவல்துறையினர் மிரட்டல் வந்த இடங்களில் எல்லாம் மோப்ப நாய்களுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடனும் சென்று சோதனை நடத்தியுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகு போனில் வந்த மிரட்டல்கள் போலியானவை என்று உறுதி செய்துள்ளனர்.
இப்படி போலீஸாரை அலைக்கழித்த பெங்களூரை சேர்ந்த சிவக்குமார்(30) என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின்போது அவர் கூறியதாவது:
எனது தந்தை ஆசாரி வேலை செய்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்த நானும் சில நாட்கள் தந்தையின் தொழிலை செய்தேன். பின்னர் அது பிடிக்காமல் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். இங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் பணம் சம்பாதிப்பதற்காக செய்தித்தாள்களில் வரும் காணாமல் போனவர்கள் பற்றிய விளம்பரங்களை பயன்படுத்த தொடங்கினேன். அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு காணாமல் போனவர் இருக்கும் இடம் எனக்கு தெரியும் என ஆளுக்கேற்றவாறு ஒரு தகவலைக் கூறி பலரிடம் பணம் பறித்திருக்கிறேன். இதற்காகவே நிறைய சிம் கார்டுகளை வாங்கி வைத்துள்ளேன்.
இந்நிலையில் 6-ம் தேதி காலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தபோது சிலர் அங்கே வெடிகுண்டு வைத்திருப்பதாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த தகவலை போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து சுவரில் எழுதியிருந்த ரயில்வே உதவி மைய எண்ணுக்கு போன் செய்து கூறினேன். அதைத் தொடர்ந்து எனக்கு போலீஸிடம் இருந்து தொடர்ந்து போன் வந்ததால் சிம் கார்டை மாற்றி விட்டு, புதுவைக்கு செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல காவல் கட்டுப் பாட்டு அறைக்கு தினமும் இரண்டாயிரம் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதில் சுமார் 400 அழைப்புகள் தேவையில்லாத அழைப்புகளாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். “மிரட்டல் விடுக்கும் நபர்களை இதுவரை சாதாரணமாக விட்டுக் கொண்டிருந்தோம். இனி தேவையில்லாத அழைப்புகளை யார் செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரி மாணவி சிக்கினார்
சென்னை தி.நகரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் விடுத்ததாக அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஷோபனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2-ம் தேதி உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வீட்டருகே உள்ள பொது தொலைபேசி நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு போன் செய்து இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் கடைக்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷோபனா சிக்கியுள்ளார். அவரை கைது செய்வதுகுறித்து போலீஸார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.