எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் அதிமுக விளக்கம் கேட்குமா என்ற கேள்விக்கு, அது எங்களின் குடும்பப் பிரச்சினை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
தமிழக தலைமைச் செயலக துணை செயலாளர் ஒருவர் தொலைபேசியில் உத்தரவிட்டதன் பேரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை எழுப்ப, இன்று (டிச.18) சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "கொறடா நோட்டீஸ் அடிப்படையில்தான் வாக்கு செலுத்த முடியும். வேறு யார் சொன்னாலும் வாக்களிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுக தலைமையால் இச்சட்டத் திருத்தம் குறித்து கட்சி கொறடாவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, கொறடா உத்தரவின் பேரில் தான் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர்.
கொறடாவுக்குத்தான் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும். வேறு யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. கொறடாவை மீறி ஒருவர் செயல்பட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும். அதுதான் முறை. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் அனுபவம் வாய்ந்தவர். அவர் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு 'இப்படிச் சொன்னார்' என்று சொன்னால், எங்களுக்கு எப்படித் தெரியும்? அவரிடம் நேரில் கேட்டால் தான் புரியும்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் அதிமுக சார்பில் விளக்கம் கேட்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "கேட்பதற்கு எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. அது எங்களின் சொந்தப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை. அதனைக் கிளறாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவீர்களா? இவ்வளவு பெரிய கட்சியில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்" எனத் தெரிவித்தார்.