தமிழகம்

எதிர்க்கட்சிகள் தொடர்ந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்: ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜன.22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்தன. முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் சேர்க்காமல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் மனுவைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யாத இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் உள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 14-க்கு எதிராக இந்தச் சட்டம் இருக்கிறது. எனவே இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு முன்பு, பி.வில்சன் கோரிக்கை வைத்தார். வழக்கை பிற வழக்குகளுடன் விசாரிக்க, தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

ஏற்கெனவே இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 59 வழக்குகள் உள்ள நிலையில், அனைத்தையும் இன்று விசாரணைக்கு எடுத்தது தலைமை நீதிபதி அமர்வு.

பொதுவாக இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி மனுதாரர்களின் புகார்கள், குடியுரிமைச் சட்ட த்தை திருத்தம் செய்து ஏன் அமல்படுத்தினீர்கள் என மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு மனு அளிப்பது நீதிமன்ற நடைமுறை.

அதன் அடிப்படையில் இதுகுறித்த விளக்கத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த விசாரணைக்கு வரும் வரை குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு எந்த நடைமுறையையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். வரும் 22-ம் தேதிக்குள் உரிய விளக்கத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

குடியுரிமைச் சட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறதோ, அதை எடுக்க மத்திய அரசுக்குத் தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் உரிய விளக்கத்தை 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி-23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT