கருணாநிதி சொன்ன பொய்யை நம்பியதாலேயே ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் இன்று (டிச.18) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டம் எழுந்துள்ள நிலையில், அதிமுக அதற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துப் பேசியதாவது:
"பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் இதுகுறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குப் பாதிப்பில்லை என தெரிவித்திருக்கின்றனர்.
இது ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் போன்ற சிறுபான்மையினர், மத பிரச்சினைகளின் காரணமாக, பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு வருபவர்கள், இந்தியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு மத்திய அரசின் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை அளிக்க வகை செய்யப்படும் என சட்டத்திருத்தத்தில் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். இதில் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பிறகு ஏன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்?
இலங்கையில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். நானும் இதே கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. திருத்த மசோதா தாக்கலின் போது பேசிய அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். இதே கோரிக்கையை அவர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே பொய்யான செய்தியைச் சொல்கிறார். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் ஸ்டாலின் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். அதிமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டாதாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இவை அத்தனையும் முழு பொய்.
2009-ல் அப்போதையை திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தை ஒருமணிநேரத்தில் முடித்துக்கொண்டார்.
அப்போது பேட்டியளித்த கருணாநிதி, இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது, அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்ற பொய்யான தகவலைச் சொன்னார். அதனை நம்பி, இலங்கையில் பதுங்குக் குழிகளில் இருந்த தமிழர்கள் வெளியே வந்தபோது, இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்து, சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. கருணாநிதி சொன்ன வார்த்தையை நம்பி வெளியே வந்ததால், தமிழர்கள் உயிர் நீத்தார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வது போல நாடகமாடும் கட்சி திமுக. ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? மத்திய அரசிடம் குரல் கொடுத்தார்களா? அவர்கள் பதவியைத்தான் பெரிதாகக் கருதினார்கள். அவருடைய மகனும், குடும்ப உறுப்பினர்களும் பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் நிலைப்பாடு. கருணாநிதிக்கும் அதே எண்ணம்தான், ஸ்டாலினுக்கும் அதே எண்ணம்தான்.
திமுக 13 ஆண்டுகள் மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகித்தது. அப்போது ஏன், திமுக இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரவில்லை? நாங்கள் அப்போது மத்திய அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், தொடர்ந்து மத்திய அரசிடம் இலங்கைத் தமிழர்களின் இரட்டைக் குடியுரிமைக்காக வலியுறுத்தியிருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசுவதற்கு ஸ்டாலினுக்குத் தகுதியில்லை. இலங்கை அதிபராக இருந்த ராஜபக்ச நடத்திய விருந்தில் கலந்துகொண்டு கனிமொழியும் டி.ஆர்.பாலுவும் அவர் கொடுத்த பரிசுகளை வாங்கினர். இதுதான் திமுக."
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.