சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு முன் விரிவுரையாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், நேற்று கல்லூரிக்குத் திரும்ப வந்தார். அவர் திடீரென கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கம் தாலுக்கா, எல்லையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி (57). இவரது மகள் ஹரி சாந்தி (32). இவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்குப் பிரிவில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.
பின்னர் கல்லூரியிலிருந்து விலகி வேறு பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். ஆனாலும் ஹரி சாந்தி அடிக்கடி அரும்பாக்கம் கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளார். அதன் பின்னர் இவரை யாரும் பார்க்கவில்லை.
இந்நிலையில் கல்லூரியின் முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். ஹரி சாந்தியின் இடது கை மணிக்கட்டு அருகே கத்தியால் கிழித்துக் கொண்டதால், ரத்த காயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஹரி சாந்தி எப்போது கல்லூரிக்குள் வந்தார், ஏன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார், அவருக்குக் கல்லூரியில் நெருக்கமான நண்பர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
ஹரி சாந்தியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.