இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பை அந்நாட்டு அரசிடமே ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா. அமைத்த மூவர் குழு நடத்திய விசாரணையில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2014-ல் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச நாடு களின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அன்றைய ராஜபக்ச அரசு அனுமதிக்க வில்லை. தற்போது தமிழினப் படுகொலையை மறைத்து போர்க் குற்ற விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் இதனை வெளிப்படுத்தி இருப்பதாக செய்தி வந்துள்ளது. இது உண்மையாகி விடக்கூடாது என விரும்புகிறேன். வரலாற்று நிகழ்வுகளை திரித்திடும் அமெரிக்க அரசின் இந்த முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.
‘மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்க்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் இந்த திட்டத்தில் சிறிய மாறுதல்களை செய்யத் தயா ராக இருக்கிறோம்’ என மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தமிழக அரசுதான் இறங்கி வரவேண்டும்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப் பேரவையில் பேசிய அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை, விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் முடக்கப்பட்டது. ஆனால், இப்போது ஆட்சி முடியும் தருவாயில் புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.