மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் தினமும் 6 கி.மீ. தூரம் கோயில் யானைகள் நடைபயிற்சிக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன.
தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அறநிலையத் துறை சார்பில் 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து 26 யானைகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், நேற்று காலை முகாமுக்கு புதிதாக வந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மற்றும்திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் யானை பிரக்ருதியைஅறநிலையத் துறை அதிகாரிகள் கரும்பு கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, முகாமில் பங்கேற்றுள்ள யானைகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது.
ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சக யானைகளைக் கண்ட புதுச்சேரி யானைகள், அவற்றுடன் இணைந்து குளிப்பது, நடைபயிற்சி மேற்கொள்வது, உணவு உண்பது என உற்சாகத்துடன் காணப்பட்டன.
முகாமைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, "யானைகளின் வயது, எடைக்கு ஏற்ப, நடைபயிற்சியும், உடற்பயிற்சி யும் அளிக்கப்பட்டு வருகிறது. யானைகள் இயல்பாக காடுகளில் சுற்றித்திரியும்போது, உணவுக்காகவும், நீருக்காகவும் குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவு வரை நடந்து செல்லும். இதனால் அவை உண்ணும் தீவனங்கள், எளிதில் செரிமானமாகிவிடும். அதன் கால்களும் வலுவாக இருக்கும். ஆனால், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்படுகின்றன.
இதனால், கோயில் யானைகளுக்கு வயிற்றுக்கோளாறு, செரிமானப் பிரச்சினை, கூடுதல் எடை மற்றும் நோய்கள் உருவாகின்றன. குறிப்பாக, எடை கூடிய யானைகளின் பாதங்கள் பெரிதும் பலவீனப்பட்டு, வெடிப்புகள் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு நடைபயிற்சி முதன்மையாக்கப்பட்டுள்ளது. காலையும், மாலையும் முகாமைச் சுற்றி சுமார் 6 கிலோமீட்டர் தொலைவு வரை யானைகள் நடக்க வைக்கப்படுகின்றன.
கோயிலில் அதிகம் நடக்காத யானைகள், முதலில் நடைபயிற்சி செல்ல சற்று தயக்கம் காட்டினாலும், ஓரிரு நாளில் அவை மிகுந்த உற்சாகத்துடன், அசைந்தாடி நடைபயிற்சி மேற்கொள்ளும்" என்றனர்.