சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 20 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ரதி (51). ஏழு ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் வலி குறையவில்லை.
இந்நிலையில், சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சினைப்பையில் பெரிய அளவில் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, டாக்டர்கள் சீதாலட்சுமி, ரத்தினமாலினி, திரிபுரசுந்தரி, புனித மீனாட்சி, பூவண்ணன், எபனேசர் ஆகியோர் கொண்ட குழுவினர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையில் இருந்த சுமார் 20 கிலோ கட்டியை அகற்றினர். புற்றுநோய் கட்டியா என்பதைக் கண்டறிய ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயத்தில், சினைப்பை கட்டிகள் உருவாகலாம். வயிற்று வலி, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனடியாக டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.