ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப் பட்டது.
ஆன்லைன் வணிகத்தை தடைசெய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:
ஆன்லைன் வர்த்தகம் காரணமாக உள்நாட்டு வணிகம் அழிந்துவருகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி பொருட்களை விற்பனை செய்கின்றன.
இதன்மூலம் அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பு ஏற்படுகிறது. இந்நிலை நீடித்தால் நம்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிஅடையும். ஐரோப்பா நாடுகளில்குடியிருப்புகளுக்கு வெளியே வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும். அத்தகைய நாடுகளில் ஆன்லைன் வர்த்தகம் ஏற்புடையது. ஆனால், நம்நாட்டில் ஒவ்வொரு தெருக்களிலும் பலசரக்கு கடைகள் அமைந்துள்ளன.
எனவே, இங்கு ஆன்லைன் வணிகம் ஏற்புடையதல்ல. மேலும்,இந்த தொழிலை நம்பி தமிழகத்தில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் பேர் உள்ளனர்.
அவர்கள் வாழ்வதாரம் தற்போது கேள்வியாகியுள்ளது. சிறு,குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்தே வணிகர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. ஜிஎஸ்டி வரி அதிகபட்சம் 12 சத வீதத்துக்குள் இருக்க வேண்டும். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை எடுத்துக் கூறிவிட்டோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
எனவே, உள்நாட்டு வணிகர்களின் வாழ்வாதார நலன்கருதி ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள்முன்வர வேண்டும். பொதுமக்களும் வெளிநாட்டு பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்க உறுதி மொழி எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தொடர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஜனவரி 8-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள அகில இந்திய வணிகர் சம்மேளன மாநாட்டில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் பேரமைப்பின் மாநில பொருளாளர் ஏ.ஏல்.சதக்கத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.