திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்து வந்துள்ள செய்திகள் அனைத்தும் திசை திருப்பும் செயல் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என ராமதாஸ் கூற, அதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முரசொலியின் நில விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஆனால், எதிர்த்தரப்பில் சீனிவாசன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலர் வாய்தா வாங்கினர். இதையடுத்து வெளியில் வந்து பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்தார். அவதூறு வழக்குத் தொடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி திமுக சார்பில் சீனிவாசன் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் போட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது போன்று ஒரு கடிதம் வைரலாகி வருகிறது. அதில் வரும் ஜனவரி 7-ம் தேதி உரிய ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸின் உண்மைத்தன்மையை அறியாமல் ஊடகங்கள் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் என செய்தி வெளியிட்டன, இந்நிலையில் இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஊடகங்களில், எஸ்.சி.,/எஸ்.டி. ஆணையத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 7-1-2020 அன்று டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் வந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
முரசொலி இடம் தொடர்பாக ஏற்கெனவே இந்த ஆணையத்திலிருந்து வந்த நோட்டீஸின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையில் நான், ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் கடந்த நவம்பர் 19-ம் தேதிஅன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளையின் சார்பாக விரிவான முதனிலை ஆட்சேபனை தெரிவித்தேன்.
அதேநேரத்தில், புகார் கொடுத்தவரான சீனிவாசனும், தமிழக அரசும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வாய்தா வாங்கிச் சென்றது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து, நான் செய்தியாளர்களைச் சந்தித்து முரசொலி இடம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் விரிவாக எடுத்துக் கூறியது, அனைத்து ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தது.
அதனைத் தொடர்ந்து, புகார்தாரர் சீனிவாசன் மீது சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஏதோ புதியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் அனைத்தும், திசை திருப்பும் நோக்கத்தோடு, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்”.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.