மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து சங்கரன்கோவில் ஜமாத் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து சங்கரன்கோவிலில் ஜமாத் கமிட்டி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜமாத் கமிட்டி தலைவர் செய்யதுஇப்ராஹிம் தலைமையில் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் முன்பு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு, ஊர்வலமாக வந்தனர். சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷிமிட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜமாத் கமிட்டி செயலாளர் சேனா (எ)செய்யது இப்ராஹிம், பொருளாளர் ரபிக்அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், மதிமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மதுஹக்கீம் உட்பட சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 3 அரசுப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்டடவர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரண்டதால், அவர்களை கைது செய்து, வாகனங்களில் ஏற்ற முடியாமல் போலீஸார் திகைத்தனர்.
பின்னர், போலீஸ் வாகனங்கள் தனியார் வேன்கள், அரசுப் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கைது செய்யப்பட்டவர்களை அவற்றின் மூலம் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், தேரடி பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.