தமிழகம்

பாளை அருகே குளத்தில் முதலை?- தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை

அ.அருள்தாசன்

பாளையங்கோட்டை அருகே நொச்சிகுளம் கிராமத்திலுள்ள குளத்தில் முதலை இருப்பதாக வந்த தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 மணிநேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து அணைகளில் திருப்திகரமாக நீர் இருப்பு உள்ளது. பிசான சாகுபடிக்காக அணைகளில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

மழை காரணமாகவும், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களும் நிரம்பியிருக்கின்றன. அதன்படி பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்திலுள்ள குளமும் தண்ணீர் பெருகி காணப்படுகிறது.

இந்த குளத்துக்கு இன்று காலையில் குளிக்க சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், குளத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

குளத்தில் ஊர்ந்து சென்றது முதலையாக இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இது குறித்த தகவல் நொச்சிகுளம் கிராமத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியது.

பாளையங்கோட்டை தீயணைப்பு படையினருக்கு இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் அங்கு சென்று குளத்தில் 2 மணிநேரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சமீபத்தில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கில் முதலை அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று அக்கிராம மக்கள் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் கூறும்போது கோடை காலத்தில் மட்டுமே நீர்நிலைகளை விட்டு நிலப்பரப்புக்கு முதலைகள் வரும்.

அவ்வாறு இடம்பெயரும்போது வனத்துறை மூலம் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தில் முதலை இருந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் குளத்தில் குளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT