தமிழகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் கடையடைப்புப் போராட்டம்: பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமம்

என்.கணேஷ்ராஜ்

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) கேரளாவில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் தலித், இஸ்லாமிய அமைப்புகளின் சம்யுக்த சமர-சமதி சார்பில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

வியாபார கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் இயங்கவில்லை. மேலும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தமிழக எல்லையான குமுளி மற்றும் வண்டிப்பெரியார், முண்டக்காயம் உள்ளிட்ட கேரளா முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றது. பல கடைகள் அடைக்கப்பட்டன. சுற்றுலா ஜீப்கள் இயக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரி உள்ளிட்டவை மூடப்பட்டதால் கேரளாவின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT