தமிழகம்

10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் ‘காவலன் செயலி’ பதிவிறக்கம்: காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றங்கள், திருட்டுச் சம்பவங்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. குற்றமில்லா நகரமாக்க முயற்சித்து வருகிறோம் என காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசினார்.

காவலன் செயலியை சென்னை முழுதும் அனைவரும் தரவிறக்கம் செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், தொடர்ச்சியாக அனைத்துக் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று நடத்திவருகிறார்.

இன்று (17.12.2019) காலை, நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளிடையே இச்செயலியின் பயன் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் இச்செயலியியை பதிவிறக்கம் செய்வது குறித்தும் பயன்படுத்தும் விதம் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மாணவிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து இக்கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொண்டனர்.

பின்னர் மாணவியரிடையே காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பேசியதாவது:

''தொடர்ந்து பெருநகரங்களில் மிக மிகப் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது. புள்ளிவிவரங்களும் அதைத்தான் சொல்கின்றன. புள்ளிவிவரம் தாண்டி நீங்கள் மற்ற ஊரைப் பார்த்துவிட்டு இங்கு நேரில் இங்கு வசிக்கும்போதும் அதை அனுபவபூர்வமாக உணரலாம். அதற்கு ஏற்றார்போல் எங்கள் போலீஸ் அதிகாரிகள் அவ்வளவு சின்சியராக வேலை செய்து வருகிறார்கள்.

அடிஷனல் கமிஷனர் முதல் கடைக்கோடி காவலர்கள் வரை அவ்வளவு சின்சியராக வேலை செய்து வருகிறார்கள். அதேபோன்று கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. உலகிலேயே பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது சென்னையாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசரகாலத் தேவைக்குப் பயன்படும் ‘காவலன்’ (காவலன் ஆபத்து கால உதவி கைபேசி பயன்பாட்டு மென்பொருள்) செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து அவசரகாலத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சென்னையில் 10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் ‘காவலன் செயலி’யைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன் சென்னையில் 35 மகளிர் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் பெண்களுக்காக 1992-ம் ஆண்டு மகளிர் காவல் நிலையம் தமிழகத்தில் அமைந்தது. இன்று சென்னையில் 35 காவல் நிலையங்கள் பென்களுக்காக உள்ளன.

குற்றங்கள் குறைந்த நகரமாக விளங்குகிறது என்பதற்காக இப்போதுள்ள நிலை பரவாயில்லை, குற்றம் குறைவாகத்தானே இருக்கிறது என்று திருப்தி அடைவதல்ல. இதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு காவல்துறையின் நோக்கம்”.

இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.

SCROLL FOR NEXT