தமிழகம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

த.அசோக் குமார்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை கண்டித்தும் கோஷமிட்டனர்.

தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தனுஷ் எம்.குமார், திமுக வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுக்சாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெங்கடேசன், தென்காசி நகரச் செயலாளர் சாதிக் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடைபெற்றது. இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வரிசையில், தென்காசியில் திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT