‘‘உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் எம்எல்ஏ பெரியபுள்ளான், எம்.எஸ்.பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ராஜ்சத்தியன், ரமேஷ், சீத்தாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஸ்டாலின் துரோகம் செய்கிறார். குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஏமாற்று வேலை. ஸ்டாலினின் போராட்டங்களால் திமுகவினரே சோர்ந்து போய்விட்டனர்.
திமுகவின் குடியுரிமை போராட்டம் முகாரி ராகம் (சோக கீதம்) பாடுவதுபோல உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இலங்கை அரசை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திமுகவினர்தான் தற்போது அவர்களுகக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்தவே திமுக இதுபோன்ற போராட்டங்களை செய்து வருகிறது.
திமுக மக்களவை உறுப்பினர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க டெல்லி செல்கின்றனர். திமுக எம்.பி.க்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறும். அதில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோழமைக் கட்சிகளுக்கு தேவையான இடங்களை சமரசமாக பேசி அவர்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். எங்களுக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. ஆனால், திமுகவை போல இது குடும்ப கட்சியல்ல. உழைப்பவர்களுக்கு அதிமுகவில் தேவையான பதவிகள் கிடைக்கும் என்பது உண்மை.
ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உட்பட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், எந்த காரணமும் இல்லாமல் அரசையும், அதிமுகவையும் விமர்சனம் செய்கின்றனர். அதிமுக பற்றி விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கோ, துரைமுருகனுக்கு தகுதி இல்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.