நாஞ்சில் சம்பத்: கோப்புப்படம் 
தமிழகம்

வரலாறு நெடுகிலும் வஞ்சத்தையே செய்து பழக்கப்பட்ட கூட்டம்: பாஜகவை விமர்சித்த நாஞ்சில் சம்பத்

செய்திப்பிரிவு

வரலாறு நெடுகிலும் வஞ்சத்தையே செய்து பழக்கப்பட்ட கூட்டம் என, பாஜகவை நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (டிச.17) சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

"தேசத்தை ஒரு முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. தேசமே இன்றைக்கு சிறைச்சாலையாகி விட்டது. பெரும்பான்மை இருப்பதால், இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெட்கமில்லாமல் பேசுகிறார். கடந்த தேர்தலில் 37.2% வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் போதாமையால்தான் மோடி பிரதமராகியிருக்கிறார்.

ஆளுவதற்கு அதிகாரம் தந்தால், நாட்டைப் பிளப்பதற்கு மோடிக்கு அதிகாரம் தந்தது யார்? இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்கும் உங்களுக்கும் சம்பந்தமுண்டா? இந்தச் சட்டத்தில் இந்தியாவின் விடுதலைக்கு ஈகம் செய்த முஸ்லிம்களுக்கு இடமில்லை. ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இடமில்லை. மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தான் எந்த அடிப்படையில் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? எங்கள் தரப்பில்100 கேள்விகள் இருக்கின்றன. அந்த தரப்பில் அறிவின் நாணயம் இருந்தால் இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?

இந்தியாவின் விடுதலையை நீங்கள் கொண்டாடியவர்களா? நாங்கள் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கவில்லை. வரலாறு நெடுகிலும் வஞ்சத்தையே செய்து பழக்கப்பட்ட கூட்டம். மக்களின் முன்னால் சாம்ராஜ்யங்கள் சாம்பல் மேடுகளானதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இந்தச் சட்டத்தை பிரதமர் திரும்பப் பெறாவிட்டால், உங்களைத் திரும்பப் பெற அதிக நேரம் ஆகாது என திமுக எச்சரிக்கிறது".

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

SCROLL FOR NEXT