கனிமொழி: கோப்புப்படம் 
தமிழகம்

இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அமித் ஷா பேசுகிறார்: கனிமொழி விமர்சனம்

செய்திப்பிரிவு

பாஜகவுக்கு தமிழர்கள் என்றாலே பிடிக்காது என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (டிச.17) சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியதாவது:

"குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஐநா இந்தச் சட்டத்தைக் கண்டித்திருக்கிறது. இச்சட்டம் மனித குலத்திற்கு எதிரானது. மனிதர்களைப் பாகுபடுத்தக்கூடியது என, ஐநா கண்டித்திருக்கும் சட்டம் இது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்கக்கூடிய சட்டம்.

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் உள்ளன. பாகிஸ்தானிலும் எல்லா முஸ்லிம்களும் சமமாக வாழ்வதற்கான சூழல் இல்லை. ஆனால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இச்சட்டத்தில் குடியுரிமை கிடையாது. இது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. இலங்கையில் இருந்து எத்தனை இந்துக்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? இதைக்கேட்டால் இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்கிறார்.

இதுதான் அவர்கள் தமிழர்களுக்குக் கொடுத்திருக்கும் மரியாதை. ஏனென்றால் அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே பிடிக்காது. தமிழர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். பாஜக இங்கு காலூன்ற முடியாது.

பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவற்றை மறைக்க அடுத்தடுத்து பாஜக பிரச்சினைகளை உருவாக்குகின்றது. அரசே பிரச்சினைகளை உருவாக்குவது கேவலமான நிலை".

இவ்வாறு கனிமொழி பேசினார்.

SCROLL FOR NEXT