தமிழகம்

கைதிகளை நல்வழிப்படுத்த காந்தி கிராமம் பல்கலை.- தமிழக சிறைச்சாலைகளில் புதுமுயற்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் தனிச்சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், 5 சிறப்பு கிளை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்ளன. கொலை, கொள்ளை மற்றும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இந்த சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை தருவது மட்டும் சிறைச்சாலையின் நோக்கமில்லை. சட்டத்தை மீறி நடக்காமல் சட்டத்தைப் பின்பற்றுவது எப்படி என்று சொல்லித் தருவதும், தனிமனித ஒழுக்கத்தை கற்றுத் தரும் இடமாகவும் சிறைச்சாலை இருக்க வேண்டும். ஆனால், சிறைச்சாலைகளில் வெளியேறும் கைதிகள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கான காந்திய சிந்தனையும், வாழ்வியல் திறன் மேம்பாடும் என்ற குறுகியகால சான்றிதழ் பாடத்திட்டத்தை காந்தி கிராமம் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இந்த பாடத்திட்டத்தில் கைதிகளுக்கு காந்திகிராமம் பல்கலைக் கழக காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல் துறை சார்பில் குறுகியகால வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்பில் கைதிகள் ஆர்வ மாக சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து காந்திகிராமம் பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் நேற்று கூறியதாவது:

நோயுற்ற மனதில் இருந்துதான் குற்றங்கள் உருவாகிறது என்றார் காந்தியடிகள். அதனால், இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் ஒருவரிடம் நல்ல மன மாற்றத்தை உருவாக்க முடியும். சிறைச்சாலைகள் என்பவை தண்டனை கொடுப்பதற்கான இடமில்லை. அது ஒரு சீர்திருத்தப் பள்ளி. அதனால், கைதிகள் தண் டனை குற்றவாளிகள் இல்லை. அவர்கள் ஒரு மாணவர்களே.

இவர்கள் திருந்தினால் மாமனிதர்களாக மாற வாய்ப்புள்ளது. மனிதனுக்கு வேண்டிய முக்கிய குணங்கள் சத்தியம், அகிம்சை, உடல் உழைப்பு. உடல் உழைப்பு மூலம் நமக்கு தேவையானவற்றை நாமே பெற்றுக் கொள்ளலாம். இந்த 3 குணங் களையும் சிறைவாசிகள் கடைப் பிடித்தால் அவர்கள் நல்ல மனிதர் களாக சிறையைவிட்டு வெளியே செல்லலாம். அதனால், கைதிகளை நல்வழிப்படுத்த காந்தி கிராமம் பல்லைக்கழகம் காந்திய சிந்தனை பற்றிய புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

பாளையங்கோட்டை சிறைச் சாலையில் முதல்முறையாக காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகம் கைதிகளுக்கு இந்த காந்திய சிந்தனை பற்றிய குறுகிய கால சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது.

இங்கு இந்த படிப்பு வரவேற்பை பெறும்பட்சத்தில் இதை மற்ற சிறைச்சாலைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் வேலைகளை செய்வதற்கும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் நல்ல தூண்டுகோலாக அமையும். சீர்திருத்தம், மறுவாழ்வு, மீண்டும் சமூகவயப்படுதல் உள்ளிட்டவை இந்த பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்றார்.

SCROLL FOR NEXT