தமிழகம்

கடையடைப்பு போராட்டம் முழுமையான வெற்றி: நல்லகண்ணு, வைகோ கருத்து

செய்திப்பிரிவு

`மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் முழு வெற்றிபெற்றுள் ளது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டுக்கு நல்லகண்ணு நேற்று வந்தார். அவரை வைகோவின் தாயார் மாரியம்மாள் சால்வை அணிவித்து வரவேற்றார். மாரியம் மாளின் உடல்நலம் குறித்து நல்லகண்ணு விசாரித்தார். அதைத் தொடர்ந்து, கலிங்கப்பட்டியில் மதுக்கடையை அகற்றக் கோரி நிகழ்ந்த போராட்டத்தில் காய மடைந்த வைகோவின் தம்பி ரவிச்சந்திரனிடம் நல்லகண்ணு நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது:

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடைகளால் ஏழைகளின் வாழ்க்கை இருண்டுள்ளது. அவர் களது வாழ்க்கையில் ஒளியேற்ற உடனே டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என்றார் அவர்.

வைகோ:

டாஸ்மாக் கடை களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் புகையிலை கம்பெனி நடத்தி வருகிறார் கள் என்று அதிமுக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் எனது மகன் புகையிலை நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் பங்குதாரராக நான் இல்லை. நான் பினாமி பெயரில் தொழில் செய்யவில்லை. தமிழக அரசு சிகரெட்டை தடை செய்தால் நாங்கள் அதை வரவேற்போம். மது ஒழிப்புக்கு ஆதரவாக நடந்து வரும் மாணவர் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்குவது தவறு.

தற்போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்துகிறோம். திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப் பில் பங்கேற்காத நிலையில் கடை யடைப்பு போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ்மாக் கடை களை மூட மறுத்தால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். என் மீது வழக்கு பதிவு செய்தால் சந்திக்க தயார் என்றார் அவர்.

SCROLL FOR NEXT