கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் நலவாழ்வு முகாமில், யானைகளின் பயணக் களைப்பை போக்கும் வகையில் `ஷவர் பாத்' குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில், பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் கோயில் யானைகளுக்கான சிறப்புநலவாழ்வு முகாம் நேற்று முன்தினம்தொடங்கியது. பல கிலோ மீட்டர்தொலைவு லாரியில் பயணித்து வந்த யானைகளின் களைப்பை போக்கும் வகையில், ஆற்றங்கரையோரம் ஷவர்கள் அமைக்கப்பட்டு, யானைகளின் குளிக்க வைக்கப்பட்டன.
மணிக்கணக்கில் ஆனந்த குளியலை அனுபவித்த யானைகளுக்கு, கால்நடை மருத்துவக் குழுவினரின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஒரு சிறிய பரப்பில் 26 யானைகளும், பாகன்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, வரிசையாக நடைப்பயிற்சி செல்வதும், அடுத்தடுத்து குளிப்பதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பலரும் குடும்பத்துடன் வந்திருந்து, செல்போன் மூலம் படமெடுத்து மகிழ்ந்தனர்.
இயற்கையான சூழல், ஷவர் பாத் குளியல், நடைப்பயிற்சி, பிடித்தமான பசுந்தீவனங்கள், வயிறு நிறைய சத்தானஉணவு, இயற்கையான சூழல்ஆகியவற்றால் யானைகள் பெரிதும் குதூகலமடைந்துள்ளன.
பெரும்பாலும் யானைகள் நின்றபடியே தூங்கும் இயல்புடையது என்றாலும், லாரிகளில் நின்றபடி பல மணி நேரம் பயணித்த காரணத்தால், தரையில் படுத்து குழந்தைகளைப்போல தூங்கின.