காஞ்சிபுரத்தில் நெல் அரவை ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் ஏகாம்பரநாதர் கோயில் சர்வ தீர்த்த குளத்தின் வரத்து கால்வாய்கள் அடைப்பு ஏர்பட்டு தூர்ந்து போனது. இந்த கால்வாய்களை பராமரிப்பதில் அரசுத்துறைகளிடையே நிலவும் போட்டியே குளத்துக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் நகரப்பகுதியில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் மண் (ப்ருத்திவி) தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமாக, காஞ்சிபுரம்-அரக்கோணம் செல்லும் சாலையில் சர்வ தீர்த்த குளம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், ஏகாம்பர நாதர் கோயிலின் பங்குனி உற்சவ பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் திருமஞ்சனம் நடைபெறும். நகரத்தின் வெளியே உள்ள கிராமங்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமும் இதுதான்.
இந்நிலையில், இந்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள் குளத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பஞ்சு பேட்டை மற்றும் லாலாதோட்டம் பகுதியில் உள்ள குளத்தின் பிரதான நீர்வரத்து கால்வாயை பரா மரிக்கும் பணி யாருடையது என்ற போட்டியில் நகராட்சியும் பொதுப் பணித்துறையும் அமைதியாக உள்ளன. இதனால் முறையான பரா மரிப்பின்றி கால்வாய் தூர்ந்து வருகிறது.
மேலும், கால்வாயை ஒட்டியுள்ள நெல் அரவை ஆலைகள், கழிவுகளை அதில் வெளியேற்றி வருகின்றன. இதனால், சர்வ தீர்த்த குளத்துக்கு மழைநீர் வருவதில் தடை ஏற்பட்டு, குளம் வறண்டு வருகிறது.
இதுகுறித்து, லாலா தோட்டத் தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும்போது, ‘குளத்தை சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களின் மழைநீரை, குளத்துக்கு கொண்டு செல்ல அமைக்கப்பட்ட கால்வாயில் நெல் அரவை ஆலையின் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால், கால்வாயில் நெல் உமிகள் டன் கணக்கில் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் கால்வாய் முற்றிலும் தூர்ந்துள்ளதால், அதனருகே உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது. இதனால், கால்வாயை தூர்வாரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை’ என்றார்.
குளக்கரையில் வசிக்கும் மணி வண்ணன் கூறும்போது, ‘கடந்த 2011-ம் ஆண்டு ரூ.45 லட்சம் செலவில் குளத்தின் உள்ளே கரைப்பகுதியில் நடைபாதை கள் மற்றும் சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இவை நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், நடைபாதை ஆங்காங்கே சேத மடைந்தும், முட்புதர்களாகவும் மாறியது. முன்னோர்களுக்கு திதி வழங்கும் புண்ணிய குளமாக விளங்கும் இக்குளத்தை, கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை’ என்றார்.
இதுகுறித்து, ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேச னிடம் கேட்டபோது, ‘சர்வ தீர்த்த குளத்தின் உள்ளே நடை பாதைகளில் உள்ள முட்புதர்களை அவ்வப்போது அகற்றி வருகிறோம். மேலும், குளத்தில் நீர் வரத்து கால்வாயை தூர்வாரக்கோரி மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது’ என்றார்.
காஞ்சிபுரம் நகராட்சி பொறி யாளர் சுப்புராஜ் கூறியதாவது: குளத்தின் நீர்வரத்து கால்வாய், நகராட்சி பகுதியில் உள்ளபோதும் அதன் பராமரிப்பு பணிகள், பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில்தான் உள்ளது. அதனால், அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து காஞ்சிபுரம் பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெகராஜிடம் கேட்டபோது, ‘சர்வ தீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்பது பற்றி ஆவ ணங்களை ஆய்வு செய்து வருகி றோம். ஆவணங்கள் இருந்தால் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், நடைபாதை ஆங்காங்கே சேதமடைந்தும், முட்புதர்களாகவும் மாறியது.