பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘காவலன்’ செல்போன் செயலியை தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 87 ஆயிரத்து 282 பேர்பதிவிறக்கம் செய்துள்ளதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அம்மாநில போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசரகால தேவைக்கு பயன்படும் ‘காவலன்’ (காவலன் ஆபத்து கால உதவி கைபேசி பயன்பாட்டு மென்பொருள்) செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து அவசரகாலத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளிடம் ‘காவலன்’ செல்போன் செயலியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
‘காவலன்’ செயலியின் தன்மை,பயன்கள், செயல்படும் விதம், எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் தமிழகம் முழுவதும் போலீஸார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். குறும்படம் திரையிட்டு விளக்கியும் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 87 ஆயிரத்து 282 பேர் ‘காவலன்’ செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.