தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னையில் ஒரே நாளில் 1,776 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சமூகநலத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், ஈ.வெ.ரா மணியம்மையார் உள்ளிட்ட 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், ஏழை பெண்களுக்காக வழங்கப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டதாரி அல்லாதோருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூகநலத் துறையின் சார்பில் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதன்படி, நேற்று ஒரே நாளில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 773, திருவிக நகர் மண்டலத்தில் 455, ராயபுரம் மண்டலத்தில் 375 உட்பட சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 1,776 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர அவரவர் வங்கிக் கணக்கில் நிதியுதவி செலுத்தப்படும். இதற்காக ரூ.7 கோடியே 63 லட்சம் திருமண உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 14,208 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது " என்றார்.
நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.