தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறைந்து வருகிறது. மழை பெய்யும் இடங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. உள் மாவட்டங்கள் பலவற்றில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது தமிழகத்தை சுற்றி காற்று சுழற்சிகள் ஏதும் இல்லை. ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி வருகிறது. அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, மணல்மேடு, காரைக்கால், திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.