சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயது மூதாட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம் பட்டி அடுத்த முருங்கபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயதான கனக வல்லி என்பவர் நேற்று தனது உறவினர்கள் புடைசூழ வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கனகவல்லி ஏற்கெனவே முருங்க பட்டி கிராம ஊராட்சி தலைவராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். மேலும், இதே கிராம ஊராட்சி யில் கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி, மகன் பார்த்தசாரதி ஆகியோர் தலா 20 ஆண்டுகள் ஊராட்சி தலைவராக இருந்துள்ளனர்.
இதுகுறித்து கனகவல்லி கூறியதாவது:
நானும் எனது குடும்பத்தினரும் ஊராட்சி தலைவராக இருந்தபோது, கிராமத்துக்கு தேவையான சாலை, மின்சாரம், பொது சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அதிகாரிகள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். இதனால், எங்கள் குடும்பத்தின் மீது பொதுமக்களுக்கு தனிப்பட்ட முறையில் அபிமானம் உள்ளது.
தேர்தலுக்காக எங்களை ஒரு ரூபாய்கூட செலவு செய்ய பொதுமக்கள் விடுவதில்லை. பொதுமக்கள் தங்களின் சொந்த பணத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்கள் குடும்பத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றியை அளித்து வருகின்றனர். இத்தேர்தலிலும் நான் வெற்றி பெற்று, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவேன் எனறார்.