தமிழகம்

எழுவர் விடுதலையில் முடிவெடுக்காமல் தாமதிக்கும் ஆளுநரை நீக்க கோரி வழக்கு: தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் 

செய்திப்பிரிவு

நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் கோரிய வழக்கில் குடியரசுத்தலைவர் நியமித்த ஆளுநரை நீக்கச் சொல்லி நாங்கள் எப்படி உத்தரவிட முடியும் எனக்கேட்ட உயர் நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் -9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

முதல்வர் நியமனம் தவிர்த்து, பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1)பிரிவு கூறியுள்ளது. பாஜக உறுப்பினாராகவும், ஆர்எஸ்எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுனர், ஆர்எஸ்எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, அரசியல் சாசன அதிகாரங்களுக்கு முரணானது என வாதிட்டார்.

அமைச்சரவை பரிந்துரை மீது முடிவெடுக்க எந்த கால நிர்ணயமும் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT