தமிழகம்

பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மகளிர் ஆணையம் முன் இயக்குநர் பாக்யராஜ் ஆஜர்

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்காரம் குறித்து பெண்களுக்கு எதிராக சர்ச்சையாகப் பேசியதாக எழுந்த புகாரில் நடிகர் பாக்யராஜுக்கு மாநில மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதன்பேரில் இன்று பாக்யராஜ் ஆணையம் முன் ஆஜரானார்.

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தரமான, சிறப்பான பல திரைக்கதைகளை உருவாக்கியவர். இந்தியாவிலேயே சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். ஆனால் சமீபத்தில் அவர் திரைப்பட விழா ஒன்றில், பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. ஆனால், அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.

பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது'' என்கிற ரீதியில் பேசினார்.

பாலியல் பலாத்காரத்தில் பெண்கள் மீது குற்றம் சுமத்தியும், ஆண்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜின் பேச்சு அமைந்ததாக பெண்கள் அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது. தமிழக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. பெண்களைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. டிச.2 விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அன்று பாக்யராஜின் வழக்கறிஞர் மகளிர் ஆணையம் முன் ஆஜராகி பாக்யராஜுக்கு வெளியூர் ஷூட்டிங் இருப்பதால் வேறொரு தேதியில் ஆஜர் ஆவார் எனக் கேட்டதன் அடிப்படையில் டிச. 16-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மகளிர் ஆணையத்தில் பாக்யராஜ் ஆஜராகி விளக்கம் அளித்தார். தனது பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், “பொள்ளாச்சி சம்பவம் குறித்து நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றுதான் நான் கூறினேன்” என்றார்.

SCROLL FOR NEXT