பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் 
தமிழகம்

மேட்டுப்பாளையம் விபத்து: சாதியப் பாகுபாடு காரணமாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது; திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆர்.கிருஷ்ணகுமார்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளர் சாதியப் பாகுபாட்டின் அடிப்படையில் நடந்துள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (டிச.16), கோவை, மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நடூரில் நடந்த 17 பேர் உயிரிழப்பு வேதனைக்குரிய சம்பவம். இப்பகுதி மக்கள் சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டாம் எனக் கேட்டும் ஆபத்தான நிலையில் கட்டியுள்ளனர். தலித் மக்கள் என்பதால் அதிக அளவு உயரம் கொண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

அதனால், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ள வீட்டின் மொத்த கழிவு நீரும் தலித் மக்கள் வீட்டின் பகுதியில் விடப்பட்டிருக்கிறது. தூண் இல்லாமல் மிக நீளமான, உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

இதை சாதாரண விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. சாதியப் பாகுபாட்டின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் நடந்துள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நீதியை வழங்க வேண்டும்.

அமைப்பு ரீதியாக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிடோரைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT